Search This Blog

Thursday, May 17, 2012

மாதப் பெயர்கள்


 தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
சந்தஸ் : வேதத்தின் பாதம்
மாதப் பெயர்கள்
மார்கசீர்ஷி என்பது மார்கழி என்றானதாகச் சொன்னதில், பாஷா வித்யாஸங்கள் நன்றாகத் தெரிந்தன அல்லவா?தமிழில், அநேகமாக ஒவ்வொரு மாஸப் பெயரிலுமே, அந்த பாஷையின் தனி லக்ஷணப்படி மூலமான ஸம்ஸ்கிருதப் பேர் எப்படி மாறுகிறதென்று தெரிகிறது.
பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமியன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும். அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும். அநேகமாக சித்ரா நக்ஷத்தரத்தன்றுதான் சித்திரை மாஸத்தில் பௌர்ணமி வரும். சித்ரா பூர்ணிமை ஒரு விசேஷ நாளாக இருக்கிறது. தமிழில் சித்திரை என்ற மாஸப் பெயர் மூலத்துக்கு மாறாமலே இருக்கிறது. விசாக சம்பந்தமுள்ளது வைசாகம். விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம்தான் வைசாகி. மதுரை மருதையாவது போல், ஸம்ஸ்க்ருத வைசாகி தமிழில் வைகாசியாகிறது. (பெங்காலில் பைஷாகி என்பார்கள்) வைகாசி விசாகமும் உத்ஸவ நாளாக இருக்கிறது. நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் அன்றுதான். இப்போது, புத்த பூர்ணிமா என்பதாக அதற்கு விசேஷம் கொடுத்திருக்கிறார்கள்.
அநுஷ நக்ஷத்ர ஸம்பந்தமுள்ளது ஆநுஷீ. அந்த நக்ஷத்ரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற ஆநுஷீமாஸம், தமிழில் ஆனி ஆகிறது. ஷகாரம் தமிழில் உதிர்ந்துவிடுகிறது.
ஆஷாடத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் - முன்;உத்தரம் -பின். 'பூர்வாஷாட'த்தில் 'ர்வ'கூட்டெழுத்துச் சிதைந்தும், 'ஷா'உதிர்ந்தும், தமிழில் 'பூராடம்'என்கிறோம். இப்படியே உத்தராஷாடத்தை 'உத்திராடம்' என்கிறோம். இந்த ஆஷாடங்களில் ஒன்றில் பௌர்ணமி ஸம்பவிப்பதால், 'ஆஷாடீ'எனப்படுவதுதான், நம்முடைய 'ஆடி' மாஸம்.
ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்ரத்தைக் குறித்தது. முதலில் உள்ள 'ச்ர'தமிழில் அப்படியே drop -ஆகி, 'வண'த்தை 'ஒணம்'என்கிறோம். அது மஹாவிஷ்ணுவின் நக்ஷத்ரமாதலால், 'திரு'என்ற மரியாதைச் சொல்லைச் சேர்த்துத் திருவோணம் என்கிறோம். (இவ்வாறே 'ஆர்த்ரா'என்ற சிவபெருமானின் நக்ஷத்ரத்தை ஆதிரை என்றாக்கி, அதற்கும்'திரு' சேர்த்துத் 'திருவாதிரை'என்கிறோம். திரு அச்வினி, திருப் பரணி என்றெல்லாம் சொல்வதில்லை. கார்த்திகை மாஸ தீப உத்ஸவத்தை மட்டும் திருக்கார்த்திகை என்றாலும், மற்ற சமயங்களில் திரு போடாமல் கார்த்திகை என்றே சொல்கிறோம். ஹரி-ஹரபேதம் பார்க்காத தமிழ் மரபு அவ்விருவர் நக்ஷத்ரத்துக்கு மட்டும் எப்போதும் 'திரு'போட்டு மரியாதை தருகிறது. இந்த விஷயம் இருக்கட்டும்) அநேகமாகப் பௌர்ணமி ச்ரவணத்திலேயே வருவதான 'ச்ராவணி'தான், ஸம்ஸ்கிருதத்துக்கே உரிய சகார, ரகாரக் கூட்டெழுத்து drop ஆகி, ஆவணியாகிறது.
இப்படி ஏகப்பட்ட எழுத்துக்கள் தமிழில் உதிர்வதற்கு 'ஸிம்ஹளம்'என்பது 'ஈழம்'என்றானது ஒரு திருஷ்டாந்தம். ஸ வரிசையம் ச வரிசையும் தமிழில் அ வரிசையாய் விடும்.
'ஸீஸம்' என்பதுதான் 'ஈயம்'என்றாயிருக்கிறது. 'ஸஹஸ்ரம்'என்பது கன்னடத்தில் 'ஸாஸிரம்' என்றாயிருக்கிறதென்றால், அந்த 'ஸாஸிரம்' தமிழில் 'ஆயிரம்'என்று ஸகாரங்களை உதிர்த்துவிட்டு உருவாயிருக்கிறது.
'ஆயிர'த்தைச் சொன்னதால் மற்ற எண்களைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன். ஒன்று, இரண்டு, மூன்று முதலியன ஏக, த்வி, த்ரி முதலான ஸம்ஸ்கிருத வார்த்தைகளின் தொடர்பில்லாதவையாகவே உள்ளன. பஞ்ச-அஞ்சு;அஷ்ட-எட்டுஎன்பன மட்டும் ஸம்பந்தமிருக்கிறாற்போல் தோன்றுகிறது. இங்கிலீஷ் two, three என்பவை ஸம்ஸ்கிருத த்வி,த்ரி ஸம்பந்தமுடையவைதான். Sexta, hepta, octo, nove,deca என்பதாக ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து சம்பந்தத்தைச் சொல்லும் வார்த்தைகள் ஷஷ்ட, அஷ்ட, நவ, தச என்ற ஸம்ஸ்கிருத மூலத்திலிருந்தே வந்திருப்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. ஆனால் முதல் எண்ணான one என்பது 'ஏக' என்பதன் ஸம்பந்தமே இல்லாமல், தமிழ் 'ஒன்று' என்பதன் ஸம்பந்தமே இல்லாமல், தமிழ் 'ஒன்று'என்பதன் முதல் இரண்டு எழுத்துக்களாக இருப்பது ஆச்சரியமாயிருக்கிறது. தெலுங்கிலோ தமிழ் ஒன்று-வின் 'ஒ' வும், ஸம்ஸ்கிருத 'ஏக'வின் 'க'வும் சேர்ந்து 'ஒகடி'என்றிருக்கிறது. இதெயெல்லாம் பார்க்கும்போது இனத்தில் எல்லாம் ஒன்று என்பதுபோல், திராவிட -ஸம்ஸ்கிருத பாஷைகளுக்குங்கூடப் பொதுவான ஒரே மூலபாஷை இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
ஸிம்ஹளத்தில் 'ஸிம்ஹ'என்பதில் ஸ,ஹ இரண்டும் drop -ஆகி 'இம்ளம்', 'ஈளம்' என்றாகி, ள வும் ழ வாகி ஈழம் என்று ஏற்பட்டிருக்கிறது.
ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம்தான் தமிழில் பூரட்டாதி என்றாயிற்று. 'அஷ்ட' என்பது 'அட்ட'என்றாவது தெரிந்ததுதானே?உத்தர ப்ரோஷ்டபதம் உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்ரங்கள் ஒன்றிலோ, அதை ஒட்டியோ பௌர்ணமி ஏற்படுகிற ப்ரோஷ்டபதீ என்பதே புரட்டாசி என்று எப்படியெப்படியோ திரிந்து விட்டது.
ஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ' ஆச்வயுஜீ ' அல்லது ' ஆச்வினீ ' தான், நம் ' ஐப்பசி '.
கிருத்திகாவுக்கு adjective -ஆன கார்த்திகம்தான் கார்த்திகை என்று ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. முக்காலே மூன்று வாசி திருக்கார்த்திகை தீபோத்ஸவம் பௌர்ணமியாகத்தானே இருக்கிறது?மார்கசீர்ஷி மார்கழியாவதில்தான் ஆரம்பித்தேன். அம்மாதப் பௌர்ணமி திருவாதிரைப் பண்டிகையாகத் தடபுடல் படுகிறது. புஷ்யம்தான் தமிழில் பூசம். (இந்தப் 'பூச' சப்தம் பழகிப் பழகியே புனர்வஸுவையும் புனர்பூசம் என்கிறோம். அது புனர்வஸுவேயன்றி புனர் புஷ்யம் இல்லை!) புஷ்ய ஸம்பந்தமானது பௌஷ்யம்.புஷ்யத்துக்குத் திவ்யம் என்றும் பெயர். பூர்ணிமை திஷ்யத்திலே வரும் மாஸம் 'தைஷ்யம்'. அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய்த் தமிழில் 'தை'மட்டும் நிற்கிறது.
மாசி மகம் பௌர்ணமியில்தான் வருகிறது. மாகமாஸம் என்று மகநக்ஷத்ரத்தை வைத்துப் பெயரிட்டது, தமிழில் மாசி என்றாகியிருக்கிறது. ககாரம் சகாரமாகி, மாகி என்பது மாசி என்றாயிருக்கிறது. வைகாசி, புரட்டாசி, ஐப்பசி என்று C யில் முடிந்தாற்போலவே, இங்கேயும் C யில் முடித்து, மாசி என்று சொல்கிறோம்.
பூர்வ பல்குனம், உத்தர பல்குனம் என்ற இரண்டு நக்ஷத்ரங்கள் உண்டு. இரண்டிலும் நாம் முக்யமான பெயரான பல்குனம் என்பதைத் தள்ளவிட்டு, 'பூர்வ'த்தை 'பூரம்' என்றும், 'உத்தர'த்தை உத்தர நக்ஷத்திரம் என்றுமே சொல்கிறோம். ஆனால், இந்த நக்ஷத்ரங்களில் ஒன்றில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸத்தை மட்டும் "பல்குன"என்ற சப்த ஸம்பந்தமுள்ள "பங்குனி" என்ற பெயரால் குறிக்கிறோம். அந்தப் பௌர்ணமியில்தான் பங்குனி உத்தரம் என்று திருக்கல்யாண உத்ஸவம் செய்கிறோம்.
இப்படிப் பன்னிரண்டு மாஸப் பெயர்களைப் பார்த்தாலே, ஸம்ஸ்கிருதத்திலுள்ள எந்தெந்த ஒலிகள் தமிழில் எப்படியெப்படி மாறும் என்பது தெரிந்துவிடும்.